உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜன சேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தனிப்பெரும்பான்மையும் தாண்டி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதே போல், 25 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில், தெலுங்கு தேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியில் கூட்டணியில் உள்ள பா.ஜ.க 3 இடங்களிலும், ஜன சேனா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 25 இடங்களிலும் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல்களில் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியமைக்க உள்ளார். இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினரின் தாக்குதல்களால் மிகவும் பயங்கரமான சூழல் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே, தெலுங்கு தேசம் கட்சி கும்பல் களமிறங்குகிறது. கிராமச் செயலகங்கள், ரிசர்வ் வங்கி போன்ற அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் எங்கும் அழிக்கப்படுகின்றன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களால் காவல்துறை மந்தமாகிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக வலுவாக இருந்த அமைதியும் பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஆளுநர் இதில் உடனடியாக தலையிட்டு அவர்களின் அராஜகத்தை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்கள், உடமைகள் மற்றும் அரசு உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.