இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லை பிரச்சனையால், இரு நாடுகளுக்குமிடையேயான உறவு மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை பிரச்சனைக்கு சீனாவே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர், ”45 ஆண்டுகளாக எல்லையில் அமைதி நிலவி வந்தது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்து வந்தது. 1975-ல் இருந்து (சீன)எல்லையில் ராணுவத்தினர் உயிரிழக்கவில்லை. ஆனால் தற்போது அது மாறிவிட்டது. இராணுவத்தை உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குக் கொண்டு வரக்கூடாது எனச் சீனாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். சீனா அந்த ஒப்பந்தங்களை மீறிவிட்டது. இனி, எல்லையின் நிலையே இரு நாடுகளின் உறவின் நிலையைத் தீர்மானிக்கும். எனவே, தற்போது சீனாவுடனான உறவுகள் கடினமான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தின்போது பார்வையாளர்களில் இருந்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி தேவை என்ற பிரச்சனையை முன்வைத்து அதற்கு சீனா பணம் வழங்குகிறது என்றார்.
அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சர்வதேச உறவுகள் போட்டித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு நாடும் வாய்ப்புகளைத் தேடும். தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி யோசிக்கும். ஆனால் அவ்வாறு செய்யும்போது தனக்கு என்ன கிடைக்கும் என்பதையே நாடுகள் சிந்திக்கும். எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் பெரும் கடனில் சிக்கித் தவிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். விமானம் வராத விமான நிலையங்கள், கப்பல் வராத துறைமுகங்கள் என வணிக ரீதியாக நிலைக்க முடியாத திட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். நான் என்ன செய்கிறேன் என்று மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வது நியாயமானதாக இருக்கும். நிலைக்க முடியாத திட்டங்களில் கடன் சமபங்கு ஆகிறது. பிறகு அது வேறொன்று ஆகிறது” எனத் தெரிவித்துள்ளார்.