வெளிநாடுகளிலிருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏ.சி இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
கரோனா ஊரடங்கு காரணமாகப் பாதிப்படைந்துள்ள இந்தியத் தொழில்துறையை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏ.சி இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குளிரூட்டிகளை (refrigerants) கொண்ட ஏ.சி இறக்குமதி தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாய்டு, சாம்சங் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட ஏ.சி க்கள் விற்பனை இந்தியாவில் அதிகளவில் இருந்துவரும் நிலையில், இந்த தடை மூலம் இந்திய நிறுவனங்களின் ஏ.சி விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே டயர்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஏ.சி -யும் இணைந்துள்ளது.