கரோனாவைத் தடுக்க ஒரு தவணை மட்டுமே செலுத்தும் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அனுமதிக்கப்படும் ஒன்பதாவது தடுப்பூசி மருந்து என்றும், தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.
'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றை நிபுணர் குழுவில் விளக்கி டாக்டர் ரெட்டீஸ் லேபராடீஸ் நிறுவனம், அவசரகால பயன்பாடு மற்றும் பூஸ்டர் தடுப்பூசியாகப் பயன்படுத்த 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிகளை இயக்க அனுமதி கோரியது. 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி 29 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதையடுத்து, அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசியை செலுத்திய 21 நாட்களுக்கு பிறகு கரோனாவில் இருந்து 65.4% பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு தவணைகளைக் கொண்ட 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிப் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.