ஆண்கள் நலனுக்காக ஆணையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்த பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 3 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.
வழக்கறிஞர் மகேஷ் குமார் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஆண்கள் நலனுக்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது; “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்த தகவலின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 81 ஆயிரம் பேர் திருமணம் செய்த ஆண்களும், 28 ஆயிரத்து 680 பேர் திருமணம் செய்த பெண்களும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், குடும்பப் பிரச்சனையின் காரணமாகத் திருமணம் செய்த ஆண்கள் தான் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குடும்ப பிரச்சனை தொடர்பான ஆண்களின் புகார்களை காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண்களில் நலன்களைப் பாதுகாக்க ‘தேசிய ஆண்கள் ஆணையம்’ என்ற ஒரு அமைப்பை அமைக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்த பொது நல மனு நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா ஆகியோர் முன்னிலையில் வருகிற ஜூலை 3 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.