மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபா (25), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியே சென்றிருந்த தீபாவின் கணவர் மாலை வீடு திரும்பினார். அப்போது, தீபாவின் கணவர் தனது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும், அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் தீபா கூறியுள்ளார். இதனை கேட்ட தீபாவின் கணவர், அவர்களை எழுப்பாமல் இருந்துள்ளார்.
பின்னர், வெகுநேரம் ஆகியும் எந்தவித அசைவும் குழந்தைகளிடத்தில் இல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்த தீபாவின் கணவர், குழந்தகளை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பிரேத பரிசோதனையில், குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், தீபா போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீபாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், தீபாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞருடன் வாழ நினைத்த தீபா, அதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதனால், காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன், திரும்பி வருவதற்குள் தனது குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தீபா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.