உலகின் மிகப்பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று கூறப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பணவீக்கம் 4.4 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், உணவுப் பொருட்களின் விலைகள் சீராகும்.
தேர்தல்கள் வந்த போதிலும், நிதி ஒருங்கிணைப்பு பாதையில் உள்ளது. கையிருப்பு நிலை மிகவும் நன்றாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் வேலைகளை உருவாக்குவது போன்ற சிக்கல்கள் உள்ளது அந்தச் சூழலில், 2019-2020ல் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களை குறியீடு செய்து செயல்படுத்துவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பைக் கொடுக்கும்.
மேலும், தற்போது வைத்திருக்கும் சில வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். வர்த்தகத்தை தாராளமயமாக்கும்போது, உற்பத்தி நிறுவனங்கள் வாழ அனுமதிக்கப்படுகிறது. அதுவே அதிகப்படியான வேலைகளை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதனால், வர்த்தகக் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவது முக்கியம் என்று நினைக்கிறேன். உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி, டிஜிட்டல் உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி, சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். விவசாயம் மற்றும் நிலச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி மற்றும் திறமையை வலுப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.