இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மெல்ல ஓய்ந்து வருகிறது. அதேநேரத்தில் கேரளா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு இன்னும் அதிக அளவிலேயே பதிவாகி வருகிறது. இதனையடுத்து கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, மூன்று நாட்களுக்கு கேரள அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. ஆனால், இந்த தளர்வுகள் கூட்டம் கூடுவதற்கு வழிவகுத்துவிடும் எனவும், இந்த தளர்வுகளைத் திரும்பப் பெறாவிட்டால், கேரள அரசின் முடிவுக்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் கேரள அரசு, கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறாததால், பக்ரீத் பண்டிகையையொட்டி தளர்வுகள் அளிக்கும் கேரள அரசின் முடிவினை எதிர்த்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.