தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மணிப்பூர் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மணிப்பூர் தலைநகரான இம்பாலிற்கு வந்தடைந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பரவல் அச்சத்தின் காரணமாக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. அதே போல் இன்று (27.08.2021) காலை கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
மணிப்பூர் ஆளுநராக பதவி ஏற்ற இல.கணேசனுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவானது 10 நிமிடத்தில் நிறைவடைந்ததை அடுத்து அம்மாநில முதல் மந்திரி பிரெண்சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஹிந்தியில் பதவி ஏற்றுக் கொண்ட இல.கணேசனுக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சரளமாக பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன், டால்பின் ஸ்ரீதர் மற்றும் இல.கணேசனின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.