புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரி காராமணி குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இன்று முதல் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கண்காட்சியின் துவக்க விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சிகளைப் பார்வையிட்டு மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, "மாணவர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற கண்காட்சிகள் ஒரு தொடக்கமாக அமையும். மேலும் எந்தப் பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, என்ன படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு ஏற்றார்போல் மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உலக நாடுகளில் அதிக அளவு இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது பெருமையாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அதிலிருந்து நாம் மீண்டு வந்ததுடன் உலக நாடுகளுக்கும் உதவிகளைச் செய்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகள் கல்வியில் தடைப்பட்டிருந்தாலும் தற்போது புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கி உள்ளோம்.
மேலும் தனி மனிதனாகச் சென்று அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறேன். இதனை விரிவுபடுத்தும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க ஒரு தனி அமைப்பு தொடங்க முயற்சிகள் செய்து வருகிறேன். இது சம்பந்தமாக கல்வித்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் அந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன்" என்றார்.