கொரோனா காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக தீபத் தேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தீபக் தேஷ்முக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை தொடர்ந்து தீபக் தேஷ்முக்கை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தது. அதோடு அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைப்பற்ற ஆவணங்களைத் திருத்தி விடுவார் எனக் கூறி தேஷ்முக்கை கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரேவதி மொஹிதேரே மற்றும் பிரித்திவிராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (28.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் திடீரென அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது ஏன்?. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான நிலையிலும், அவரை கைது செய்திருப்பது சட்டவிரோதம் ஆகும். அதாவது அமலாக்கத்துறையால் 3 முறை சம்மன் அனுப்பப்பட்ட போது மனுதாரர் விசாரணைக்கு ஆஜராகி அவர் ஒத்துழைப்பு அளித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரி தனது விருப்பம் போல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளார். அமலாக்கத்துறை தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இஷ்டம் போல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கல்வி நிறுவன அதிபரின் மகனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.