பிரச்சார மேடைகளில் யாராவது காங்கிரஸ் தலைவர்களை அநாகரிகமாக விமர்சித்துப் பேசிவிடுவதும், அத்தகையவர்களைக் கண்டித்து கதர்ச்சட்டையினர் போராடுவதும், வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாகி விட்டன.
தமிழ்நாட்டில் சீமான் என்றால், அரியானாவில் அம்மாநிலத்தின் முதல்வர் மனோகர் லால் கட்டார். கார்கோடாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் “காங்கிரஸ் கட்சிக்கு மூன்று மாதங்களாக நாடு முழுவதும் தலைவரைத் தேடினார்கள். யாரும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லை. அதே குடும்பத்தைச் சேர்ந்த சோனியாவை தலைவராகத் தேர்வு செய்துவிட்டனர். எலியைப் பிடிப்பதற்கு மலையைக் குடைந்தார்கள். பிடித்தது என்னவோ செத்த எலிதான்.”என்று பேசிவிட்டார்.
இதனைக் கண்டித்திருக்கும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஹரியானா முதல்வர் பேசியிருக்கும் கருத்துகள் இழிவானவை. அவரும் சரி, பா.ஜ.க. கட்சியின் அணுகுமுறையும் சரி, பெண்களை அவமரியாதை செய்வதாகவே இருக்கிறது. மனோகர் லால் கட்டாரின் அநாகரிகப் பேச்சு அதனை பிரதிபலிப்பதாகவே உள்ளது. வேலையின்மை மற்றும் கடுமையான பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார். இந்தியாவின் கற்பழிப்பு தலைநகராக ஹரியானா மாறிவிட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, தனது பேச்சுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஹரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா “அநாகரிகமாக இப்படி பேசுவது கட்டாருக்கு ஒன்றும் புதிதல்ல. சோனியா காந்தி குறித்த அவரது மோசமான கருத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் நேர்ந்திருக்கும் அவமானம். அக்டோபர் 21- ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் போது, ஹரியானா மக்கள் தொகையில் பாதிப்பேர் அவரைத் தண்டிப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்கிறார்.
அன்றே பாடிவிட்டான் பாரதி -
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி
கிளியே..
வாய்ச்சொல்லில் வீரரடி!
தமிழகத்திலும் வாய்ச்சொல் வீரர்களுக்குப் பஞ்சமில்லை!