



டெல்லியில் இன்று (12/08/2021) பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (12/08/2021) பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார். மேலும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.
கரோனா காலத்தில், மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களுக்கும் செய்த உதவிகளுக்கும் நேற்றைய தினம் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் சட்ட முன் வரைவிற்கும் துணைநிலை ஆளுநர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், பிரதமர் அளித்த ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.