நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஞாயிறு இரவு உயிரிழந்தார். மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது.
பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் செய்தார். தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 2 மணிக்கு கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகிய இருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி, கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் மூலம் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற கவர்னர், இன்று காலை 11.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையின் பலம் தற்போது 36 ஆக உள்ளது. இதில் பா.ஜ.க வின் பிரமோத் சாவந்த் அரசுக்கு ஆதரவாக 20 பேரும், எதிராக 15 பேரும் வாக்களித்தனர். இவர்களில் 14 பேர் காங்கிரஸ் கட்சியையும், ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்.
இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக வுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் தற்போது பாஜக தனது பலத்தை நிரூபித்திருப்பது பெரும் அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.