
ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து, மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர் மூலம் அரசாங்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பல இடங்களில் மக்கள் உடைமைகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜயவாடாவில் தாபா கோட்லு சென்டர் பகுதியில் நான்கு நாட்களாகியும் மழை நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அரசு சார்பில் டிராக்டர் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் மற்றும் உணவு பொருட்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குடமேரு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்பில் நான்கு நாட்களாக மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.