வீட்டு உபயேக கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரக்ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சசோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என தெரிவித்தார். இந்த விலை குறைப்பு வர்த்தகரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், “தேர்தல் தோல்வி பயத்தால் பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைய கேஸ் சிலிண்டர் விலையேற்றமே முக்கிய காரணம். இந்தியா கூட்டணியின் 2 கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் மூன்றாவது கூட்டம் நடக்க உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது” என தெரிவித்துள்ளார்.