மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், இன்றுடன் 16 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நாளை டெல்லி -ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி -ஆக்ரா சாலையில் மறியல் போராட்டம் நடத்தவுள்ள விவசாயிகள், டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தவும், நாடு முழுவதுமுள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளனர். மேலும் விரைவில் ரயில் மறியல் போராட்டங்கள் தொடங்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சி, வேளாண்மை சட்டங்கள் பற்றி, நாடு முழுவதும் 700 செய்தியாளர் சந்திப்புகளையும், 700 பொதுக்கூட்டங்களையும் நடத்தவுள்ளது. வேளாண் சட்டங்கள் குறித்து அதிருப்தி அதிகரித்து வரும் சூழலில், மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும், இப்பொதுக்கூட்டங்களும், செய்தியாளர் சந்திப்புகளும் நடத்தப்படவுள்ளன.