18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 295 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து சுயட்சையாக போட்டியிட்ட சிறை கைதி எஞ்சினியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷே சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பாராமுல்லா நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயட்சையாக போட்டியிட்டார். ரஷித் சிறையில் இருந்தால் அவரது இரண்டு மகன்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் ரஷீத் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்துல் ரஷீத் ஷே, வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.