துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து 2 விமானிகள் உட்பட 18 பேர் என உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான விமானி கடைசி நேரத்தில் விமானத்தின் எஞ்சினை நிறுத்தியதால் ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் தன்னுயிரை இழந்து அதிகபட்ச உயிரிழப்பைத் தடுக்க செயல்பட்ட விமானி வசந்த் சாதே இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமாண்டர் என்பது தெரியவந்துள்ளது. 1981 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சேர்ந்து பணியாற்றிய வசந்த் சாதே திறமையான விமானி என்பதும், 'ஷொட் ஆஃப் ஹானர்' விருது பெற்ற அவர், 2003 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று ஏர்பஸ் விமானியாகச் சிலகாலம் பணியாற்றினார். கடைசியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் ரக விமானத்தின் விமானியாக சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அவரை நினைக்கையில், ''நான் போரில் இறந்தால் எனது உடலைப் பெட்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்புங்கள். நான் சாதித்த பதக்கங்களை தாயிடம் கொடுத்து நான் நாட்டிற்காகச் சாதித்ததாக அவரிடம் கூறுங்கள். என்னால் இனி என் தந்தை பதற்றம் அடையமாட்டார். என் சகோதரனை நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள். என்னுடைய இருசக்கர வாகன சாவி இனிமேல் அவனுடையது தான். யாரும் வருத்தப்பட வேண்டாம் நான் இனி பிறந்து வரப்போவதில்லை எனவே அழவேண்டாம் என்று எனது அன்புக்குரியவர்களிடம் சொல்லுங்கள்'' என்ற சிறந்த போர்வீரன் கவிதை நினைவுக்கு வருவதாக உயிரிழந்த விமானியின் உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.