பீகாரில் ஏற்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று (28.01.2024) காலை 10.30 மணியளவில் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தனது ராஜினமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து நிதிஷ்குமாரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்தார். ஆளுநரின் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், “இன்று நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலரிடமும் ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியல் சூழ்நிலை காரணமாக மகா கூட்டணி முறிந்துவிட்டது. மகா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்ய முயற்சித்தும் முடியவில்லை. எனவே மகா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். அதே சமயம் புதிய கூட்டணியை அமைப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இன்று காலையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க நிதிஷ் குமாருக்கு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்திருந்தனர். அதே சமயம் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு நிபந்தனையுடன் ஆதரவு தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த 2 மணி நேரத்தில் பாஜக ஆதரவுடன், பாஜக ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரி இருந்தார். அந்த கடிதத்தில் தனக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
கடந்த 23 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார். பாஜக கூட்டணிக்கு நான்காவது முறையாக மாறி முதலமைச்சராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்பொழுது நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் நிதிஷ்குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். காலையில் ராஜினாமா, மாலையில் பதவியேற்பு என அரசியல் பரபரப்பில் சிக்கியுள்ளது பீகார்.