மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது. இதனைக் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி (04.12.2023) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஆம் தேதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. 35 அடி உயர் சத்ரபதி சிவாஜியின் சிலை, தலை, கை மற்றும் கால் எனத் தனித் தனியாக முழு சிலையும் விழுந்து நொறுங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சிலை திறக்கப்பட்டு எட்டே மாதத்தில் சிலை சேதமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சிலை சேதத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிலை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலாக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி நம் அனைவரின் அடையாளம். அவர் எங்கள் கடவுள். அவரது காலடியில் தலை வைத்து ஒரு முறை அல்ல 100 முறை நான் மன்னிப்பு கேட்கத் தயார். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நாங்கள் அரசு விவகாரங்களை நடத்தி வருகிறோம். அதனால் நான் அவர் முன் தலைவணங்குகிறேன். தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.