நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் விற்பனை சரிவால், வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதனை சார்ந்த தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், விடுமுறையை அறிவித்தும் வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மாருதி நிறுவனம் இரண்டு நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலை ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் குருகிராம், மானேசர் ஆகிய இரு இடங்களில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி, செப்டம்பர் 9 ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு மூடப்படும் என்றும், உற்பத்தி இருக்காது என்றும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 34% அளவுக்கு விற்பனை சரிந்ததால், இத்தகைய நடவடிக்கையை மாருதி நிறுவனம் எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள மாருதி நிறுவனத்தின் கார்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.