இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவரும் இன்று அமெரிக்கா திரும்ப உள்ள நிலையில், டெல்லி அரசு பள்ளியை நேரில் பார்வையிட்ட மெலனியா, அங்கு பயிலும் மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.
இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இந்தியா வந்த டிரம்ப் மற்றும் மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதன்பின் இரண்டாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் ட்ரம்ப் மற்றும் மெலனியா ஆகியோரை வரவேற்றனர். பின்னர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் மெலனியா இருவரும் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு சென்ற மெலனியா அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளிக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக பள்ளிக் குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட மெலானியா, பள்ளி பாடத்திட்டங்கள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய மெலனியா, "நமஸ்தே! இதுதான் எனது முதல் இந்திய பயணம் ஆகும். இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களின் வரவேற்பு மனதுக்கு இதமாக இருந்தது. அதேபோல இது ஒரு அழகான பள்ளி. ஒரு பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் என்னை வரவேற்றதற்கு நன்றி. உங்களை போன்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நன் 'பி பேஸ்ட்' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். அதன் 3 முக்கிய குறிக்கோள்கள் போதைப்பொருள் ஆபத்து குறித்த விழிப்புணர்வு, ஆன்லைன் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவை அடங்கும்" என கூறினார்.