Amit Shah ignored ADMK executives

இந்திய ஜனநாயகக்கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக் கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் இன்று இரவு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாகத்தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்த சூழலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் உடன் இருந்தார் என சொல்லப்பட்டது.அண்ணாமலை அண்ணா குறித்துப் பேசியது தொடர்பாகவும், பாஜக மாநிலத்தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற அதிமுக சார்பில் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அதிமுக மூத்த நிர்வாகிகள் சார்பில்மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேச கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் பேச அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக நிர்வாகிகள் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.