மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இயக்குநராக பணியாற்றி வருபவர் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் (வயது 60). இவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்திய ஏவுகணைகள் மற்றும் ராணுவ ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த மே 3ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்டுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் முதலில் கருதினர். தொடர் விசாரணையின் மூலம் அலுவலக பணிகளின்போது பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்டுடன் வாட்ஸ்ஆப் வீடியோ கால் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இவர் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வந்து உள்ளார். மேலும் இவரின் இது போன்ற செயல்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருதிய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் மும்பை காலாசவுகியில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் விஞ்ஞானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய ஏவுகணைகள் மற்றும் ராணுவ ரகசியங்களை பகிர்ந்துள்ளதாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.