டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த ஒன்பதாம் தேதி காலை வெடிகுண்டு வெடித்தது. இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாக தரையில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வந்த டெல்லி போலீஸார், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியான பாரத் பூஷன் கட்டாரியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், அவருக்கும் அவரது அண்டை வீட்டுக்காரரான வழக்கறிஞர் ஒருவருக்கும் விரோதம் இருந்து வந்ததும், அதன்காரணமாக அந்த வழக்கறிஞரை கொல்ல அவர் நீதிமன்றத்துக்குள் வெடிகுண்டை வைத்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று வெடிகுண்டில் டெட்டனேட்டர் மட்டுமே வெடித்ததாகவும், வெடிபொருள் வெடிக்கவில்லை என்றும், வெடிபொருள் வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் தெரிவித்துள்ள போலீஸார், விஞ்ஞானிக்கு வெடிபொருட்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.