கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களையும் கைப்பற்றின. இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் சித்தராமையா மட்டும் நேற்று டெல்லி சென்று கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வயிற்று வலி காரணமாக என்னால் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று தெரிவித்த டி.கே.சிவகுமார், இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே சித்தராமையாவை கர்நாடக முதல்வராக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் டெல்லி செல்லும் முன் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய டி.கே.சிவகுமார், “நான் யாரையும் முதுகில் குத்தமாட்டேன், மிரட்டவும் மாட்டேன். 135 எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் ஒரு பொறுப்பான மனிதன்” என்று தெரிவித்தார்.