இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு ஜம்மு காஷ்மீர் சென்று இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். அப்போது அவர் இந்திய இராணுவத்தின் சீருடையை அணிந்திருந்தார். இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் நாத் பாண்டே, இராணுவத்தினர், கடற்படையினர், விமானபடையினர் அணியும் சீருடையை அல்லது அவர்கள் அணியும் அடையாள சின்னத்தை மற்றவர்கள் அணிவது சட்டப்படி கிரிமினல் குற்றம் என கூறி பிரதமருக்கு எதிராக பிரயாக்ராஜ் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா, இந்த வழக்கு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ராகேஷ் நாத் பாண்டே, கடந்தாண்டு டிசம்பர் மாதமே, பிரதமர் இராணுவ உடையை அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஹரேந்திர நாத், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார எல்லையில் நடைபெறவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து ராகேஷ் நாத் பாண்டே, மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.