Skip to main content

ஜி20 மாநாடு; பொலிவு பெறும் புதுச்சேரி; மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

District Collector of Puducherry gave an interview about the G20 conference

 

புதுச்சேரியில் ஜி20 மாநாட்டினை முன்னிட்டு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறியுள்ளார்.

 

புதுச்சேரியில் ஜி20 மாநாடு வரும் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன், “நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது. புதுச்சேரியில் வரும் 30, 31 தேதிகளில் ஜி20 கூட்டம் நடக்கிறது. இதில் பல நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை சிறப்பாக நடத்த புதுச்சேரி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 30 ஆம் தேதி சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கருத்தரங்கு நடக்கிறது என்றார்.

 

மாநாட்டையொட்டி ஜி20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. பல கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகர பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். புதுச்சேரியின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், சுற்றுலாத் தலமாக வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப்படும். மாநாடு வெற்றிகரமாக நடைபெற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

 

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை என தவறான வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். இந்த பகுதிகளில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிப்ரவரி 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மாநாட்டு பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். மற்றபடி வழக்கம்போல அனைத்து கடைகளும் திறக்கலாம். பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும். மாநாட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

 

30 ஆம் தேதி இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில் விஞ்ஞானிகள் இணைந்து புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்தை வழி நடத்துகின்றனர். 31 ஆம் தேதி ஆரோவில் சென்று பல இடங்களை பார்வையிடுகின்றனர். புதுச்சேரி மாநாட்டில் 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். டி.ஐ.ஜி தலைமையில் 37 பேர் கொண்ட குழு அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்