டெல்லியில் உள்ள பழைய ராஜேந்தர் நகரில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைத்தளத்தில் தண்ணீர் நிரம்பியதில் நேற்று (27.07.2024) 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று (28.07.2024) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முடிவில் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் டெல்லி கூடுதல் துணை காவல் ஆணையர் சச்சின் சர்மா பேசுகையில், “இந்த சம்பவத்தில் மூன்று பேர் இறந்துவிட்டார்கள். நாங்கள் ஏன் இதை மறைக்கப் போகிறோம்?. சட்டப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டெல்லி மேயர் சைலி ஓபராய் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‘அனைத்து பயிற்சி மையங்களிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.