Skip to main content

தீண்டாமைக்குள்ளான அறநிலையத்துறை அமைச்சர்! 

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 

Kerala Minister K Radhakrishsnan temple issue

 

கேரளா மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சி.பி.எம். கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த சி.பி.எம். கட்சியில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கே. ராதாகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், அறநிலையத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் அமர்த்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள் குவிந்தன. 

 

இந்நிலையில், சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் சாதிய பாகுபாட்டால் கோயில் ஒன்றில் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனை கடந்த ஞாயிறு அன்று கோட்டயத்தில் நடைபெற்ற பாரதிய வேலன் சேவை சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசியபோது வெளிப்படுத்தினார். 

 

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சாதிய அமைப்பால் உருவாகியுள்ள மனநிலையை மாற்றுவது சாதாரண காரியம் அல்ல. அது மனதில் கரையாக படிந்துள்ளது. மேலும், அதனை துணியில் படிந்துள்ள கரை போல எளிதில் நீக்கமுடியாது. சமீபத்தில் நான் ஒரு கோவில் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குள்ள பூசாரி கையில் விளக்குடன் வந்தார். அதனை என்னிடம் கொடுத்து தீபம் ஏற்ற சொல்வார் என நினைத்தேன். ஆனால், அவர் என்னிடம் கொடுக்காமல் அவராகவே தீபம் ஏற்றினார். இது ஒரு சடங்கு, சம்பிரதாயம் என நினைத்து அப்பொழுது நான் எந்த இடையூறும் செய்யவில்லை. மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் நான் விரும்பவில்லை. இதற்கு எந்தவித சட்ட நடவடிக்கையும் நான் மேற்கொள்ளப் போவதில்லை. கேரள மக்கள் ஒவ்வொருவரும் இந்த சமூக பாகுபாடு குறித்த தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “இது மாதிரியான பாகுபாடுகளுக்கு நமது மாநிலம் முற்றிலும் எதிரானது. இருந்தும், கோவிலில் நடந்த சம்பவம் நம் மாநிலத்தில் நடந்துள்ளது என்பதனை நம்ப முடியவில்லை. நான் அமைச்சரிடம் இது பற்றி பேசவில்லை. ஆனால், இதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என முதல்வர் பேசினார்.

 

இந்த நிகழ்வுக்கு பையனூர் எம்.எல்.ஏ. மதுசூதன் இந்த சாதிய பாகுபாட்டை கண்டித்துள்ளார். அவர் பேசுகையில், “இச்சம்பவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மேலும், இது ஒரு முறையான செயலும் இல்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார். பல கண்டனங்கள் எழுந்தாலும் கோவில் நிர்வாகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்