பாலம் கட்டும் பணியின் போது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதில் வி.எஸ்.எஸ். என்ற கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 35) என்பவரும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சந்தோஷ் என்பவருக்கு ரூபி என்ற மனைவியும், ஆத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற மகளும் உள்ளனர். இன்று இரவு விமானம் மூலம் சந்தோஷ் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட உள்ளது.
கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்தது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை உதவி கமாண்டன்ட் சாரங் குர்வே கூறுகையில், "அதிகாலை 1:30 மணியளவில் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, எங்களின் முதல் குழு அதிகாலை 5:30 மணியளவில் மீட்பு பணியைத் தொடங்கியது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. மீட்புப் பணியில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.