மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்தின் மீது நேற்றும்(9.8.2023), நேற்று முன் தினமும்(8.8.2023) விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய ராகுல், பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் காரசார விவாதத்தினை முன் வைத்தார்.
இதையடுத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகச் சர்ச்சைகள் கிளம்பியது. ராகுல் காந்தி பேசி முடித்த பிறகு அவரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் சிரித்ததாகவும், அவர்களைப் பார்த்துத்தான் ராகுல் பறக்கும் முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராகுல் காந்திக்குப் பிறகு பேசிய பாஜக எம்.பி. ஸ்மிரிதி இராணி, பெண் எம்.பிக்கள் இருக்கும் அவையில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா? என்று ஆவேசமாகப் பேசினார். மேலும் பாஜக பெண் எம்.பிக்கள் அநாகரிகமாக நடந்துகொண்ட ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் பெண்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி அப்படி நடந்துகொள்ளவில்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
“இந்திய ஒற்றுமைப் பயணம் முழுவதும், ராகுல் காந்தி மனிதநேயம், பாசம் மற்றும் அன்பின் வெளிப்பாடாக அனைவருக்கும் பறக்கும் முத்தம் கொடுத்தார். அதனைப் பார்த்த அனைவருக்கும் தெரியும். அப்படித்தான் நேற்றும் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தார், ஆனால் மனதில் வேறு எதையோ வைத்துக்கொண்டு பாஜகவினர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர் என்றார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் வேணுகோபால். “ராகுலின் செயலை நானும் நாடாளுமன்றத்தில் பார்த்தேன்; அது அன்பின் வெளிப்பாடு. அந்த அன்பை பாஜகவால் ஏற்க முடியாது” என்றார் சிவசேன(உத்தவ்) எம்.பி பிரியங்கா சதுர்வேதி.
இந்த நிலையில், ஸ்மிரிதி இரானியின் பேச்சுக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அவையில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் இரண்டு வரிசைகளின் பின்னே தான் அமர்ந்திருக்கிறார். அவர், மல்யுத்த வீரர்களை அறைக்குள் அழைத்துப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதை விட ராகுலின் பறக்கும் முத்தம் உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா? பிரிஜ் பூஷன் செயலின் மீது நீங்கள் ஏன் கோபம் கொள்ளவில்லை?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.