நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் கடந்த 7 ஆம் தேதி (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) 4 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதே சமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.