தெற்கு டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்டது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பைய்ரெய்லி மாவட்டத்துக்குள் வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாவட்ட எல்லையில் நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தினர், அவர்களைச் சாலையில் அமரவைத்து அவர்கள் மீது கிருமி நாசினியை வேகமாகப் பீய்ச்சியடித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
தெற்கு டெல்லியிலிருந்து ஷ்ராமிக் ரயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்த மக்கள் மீது தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி மருந்தைப் பீய்ச்சி அடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெல்லி மாநகராட்சி, புலம்பெயர் தொழிலாளர்களைத் தங்க வைத்திருந்த பள்ளிக் கட்டிடத்தைச் சுற்றியும், சாலையிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்காகச் சென்ற போது, இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுத் தவறுதலாகத் தொழிலாளர்கள் மேல் கிருமிநாசினி அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.