
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி இன்று (08/04/2021) மாலை காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. கரோனா சூழலைச் சமாளிக்க உங்களின் பரிந்துரைகளை வழங்க வேண்டும். மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாகப் பரவி வருவது கவலையளிக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் கரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகின்றது. கரோனா முதல் அலையைக் கடந்து விட்டோம், தற்போது கரோனா இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். கரோனாவின் இரண்டாவது அலையின் பரவல் முதல் அலையை விட வேகமாக உள்ளது. கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சாதாரணமாக இருப்பதாகவும், பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் தளர்வடைந்துவிட்டது" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், "அனைத்து சவால்களும் இருந்தபோதிலும் முன்பை விடச் சிறந்த அனுபவமும், வளமும் நம்மிடம் உள்ளன. 70% ஆர்டி- பிசிஆர் பரிசோதனை என்பது இலக்காக இருக்க வேண்டும். கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா பரவுவதைத் தடுக்க கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு என்பது சிறந்த வழியாக இருக்கும். இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கரோனா ஊரடங்கு என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா ஊரடங்கு என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். 'தடுப்பூசி செலுத்திக் கொண்டேன் கரோனா வராது' என அலட்சியமாக இருக்கக் கூடாது.
இரவு நேர ஊரடங்கை இரவு 09.00 மணி முதல் காலை 05.00 மணி வரை அமல்படுத்துவது நல்லது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகள் பற்றிய விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும். கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வெற்றி கொள்வோம்". இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.