இந்தியாவில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு, முதன்முதலாக நேற்று (24.03.2021) ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியானது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) கரோனா தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகரித்து வரும் கரோனா பரவல், கரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது என்பதைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கரோனாவின் இரண்டாவது அலை நூறு நாட்கள் வரை (பிப்ரவரி 15 ஆம் தேதியிலிலிருந்து) நீடிக்கும் எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
மார்ச் 23ஆம் தேதி வரை இருந்த தினசரி நிலவரங்களை வைத்து பார்க்கையில், இந்தக் கரோனா இரண்டாவது அலையில் 25 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை, மாநிலங்களுக்குள் போடப்படும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பயன்தராது என்றும் தடுப்பூசி செலுத்துவது மட்டுமே ஒரே நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவாக்க வேண்டும் என கூறியுள்ள அந்த அறிக்கை, வணிக நடவடிக்கை குறியீடு கடந்த வாரம் சரிந்துவிட்டதாகவும், சில மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளின் தாக்கம் அடுத்த மாதம் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.