உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே, கரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்தார்.