கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பு ஊசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “தமிழகத்தில் கடந்த 7, 8 மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது தான் 2 இலக்கத்தில் 20,22 என்ற வகையில் வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இவர்களெல்லாம் பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கேரளாவில் நேற்று முன்தினம் (21-12-23) ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, கேரளா மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,041 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று (23-12-23) 752ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்துள்ளது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தது.