டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்த நீரஜ் சோப்ரா, 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில் சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ள நிலையில், இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 66 வது இடத்தில் இருந்து 47 ஆவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்துள்ளது. இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் நீரஜ் சோப்ராவின் வெற்றியை இந்திய ராணுவமே கொண்டாடி வருகிறது.
தகுதிச்சுற்றின் முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து காலிறுதி, அரையிறுதி என எதற்கும் இடங்கொடுக்காமல் நேராக இறுதிப்போட்டிக்கு தேர்வானார் நீரஜ் சோப்ரா. 1997 ஆம் ஆண்டு ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் காந்த்ரா என்ற கிராமத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னுடைய முழு திறமையும் ஈட்டி எறிதலில்தான் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 68.4 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இளையோருக்கான தேசிய சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு போலந்தில் நடந்த 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி வீசி தங்கப்பதக்கத்தை வென்று வெற்றி வாகை சூடினார். இதன் மூலமாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் நீரஜ் சோப்ரா.
தொடர் பயிற்சியின் மூலம் ஒரே வருடத்தில் அதை விட 20 மீட்டர் தூரம் அதிகமாக ஈட்டி வீசக் கூடிய அளவுக்கு அதில் பயிற்சி பெற்ற நீரஜ், 2016 ஆம் ஆண்டு தெற்காசிய தடகளப் போட்டியில் 82.23 மீட்டர் தூரம் ஈட்டி வீசி தங்கம் வென்றார். அதற்கடுத்த வருடமே இந்தியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டு தங்கத்தை வென்றார். இப்படி தொடர்ச்சியாக தங்கவேட்டையை தொடர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிசுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தகுதியை இழந்தார். பல போட்டிகளில் தங்கம் வென்றிருந்தாலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா தொடர் பயிற்சிகளுக்குப்பின் பாட்டியாலாவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 85.94 மீட்டர் ஈட்டி வீசி மிகுந்த நம்பிக்கையுடன் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டார். இதன் மூலமாக தடகளப் போட்டியான ஈட்டி எறிதலில் நட்சத்திரமாக ஜொலித்தார் சோப்ரா. இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வாகை சூட்டியுள்ளார். தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுகொடுப்பார் என்ற பலரின் வாக்கு தற்போது பலித்துள்ளது.
1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கொல்கத்தாவில் பிறந்த பிரிட்டிஷ் வம்சாவளி நார்மன் ட்ரிவோர் இந்தியா சார்பில் பங்கேற்று 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் வரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் தடகளப் போட்டியில் பதக்கம் பெற வில்லை. 120 ஆண்டுகால கனவு இன்று பலித்துள்ளது. ஆம் அதை நிறைவேற்றி காட்டியுள்ளார் நிர்ஜ் சோப்ரா.
ஒலிம்பிக்கில் தோல்வியை சந்தித்ததால் இந்திய மகளிர் அணி மைதானத்தில் கண் கலங்கிய காட்சி வெளியாகிய நிலையில், இன்று தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவிடம் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தார். அப்போது பானிப்பட்டிலிருந்து வந்த நீங்கள் தவித்த வாய்க்கு (தண்ணீர்) பானி தந்து விட்டீர்கள் என்றுகூறி பெருமிதம் கொண்டார்.