
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 35 வயதான விவசாயத் தொழிலாளி ஒருவர், கரோனா தொற்று முதன்முதலில் பரவியபோது, அத்தொற்றுக்கு பயந்து குடும்பத்தாருடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். தனது மனைவி, மகன், இரண்டு பெண் பிள்ளைகளோடு கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்த அவரும், அவருடன் முடங்கிய குடும்பத்தினரும் வெளியே வராமலே இருந்துள்ளனர்.
விவசாயத் தொழிலாளியின் மகன் மட்டும் அவ்வப்போது வெளியே சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடமாக இதேநிலை நீடித்துள்ளது. இந்நிலையில் அந்த விவசாயத் தொழிலாளிக்கு முதல்வர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் வீடு கட்டும் திட்டம் தொடர்பான படிவத்தில் அந்த விவசாயத் தொழிலாளியிடம் கையெழுத்து வாங்க கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
ஆனால் விவசாயத் தொழிலாளியும், அவரது குடும்பத்தினரும் கரோனா அச்சத்தால் வீட்டை வெளியே வர மறுத்துள்ளனர். இதனையடுத்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் விவசாயத் தொழிலாளியும், அவரது குடும்பத்தினரும் ஒன்றரை வருடமாக வெளியே வருவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார், கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். வீட்டிற்குள் விவசாயத் தொழிலாளியும், அவரது குடும்பத்தினரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்து காணப்பட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளனர். கரோனாவிற்கு பயந்து ஒன்றை வருடமாக ஒரு குடும்பம் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.