இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டி சென்றது. உயிரிழப்புக்களும் 500 என்ற எண்ணிக்கைக்கு மேலாக இருந்து வந்தது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடந்த இரண்டு வாரங்களாக மாநில அரசு கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. இதன் பயனாகக் கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்குக் கீழாகக் குறைந்தது. இந்நிலையில் வரும் 1ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு சில தளர்வுகளை அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.