Skip to main content

''கண்மணி அன்போடு...''-மஞ்சுமல் பாய்ஸுக்கும் பறந்த நோட்டீஸ்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
"Kanmani Anbodu..." - Notice sent to Manjummel Boys

அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா...’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எனது அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் நானே. ஆனால், எனது உரிமை பெறாமல் என் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம்” என இளையராஜா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது திரைத்துறையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தநிலையில் 'மஞ்சுமல் பாய்ஸ்' என்ற மலையாள படத்தில் கமல் நடித்த 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம் பெற்றிருந்தது. அப்படம் கேரளாவை விட தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதியின்றி குணா படப் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமைச் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இளையராஜா உரிமை கோர முடியாது'-எக்கோ நிறுவனம் வாதம்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
'Ilayaraja cannot claim'-Echo company's argument

இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷாபிக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் பாடல்களின் முதல் காப்புரிமை உரிமையாளர்கள். மேலும் பதிப்புரிமை தொடர்பாக பட தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து 4500 பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கியுள்ளது. இளையராஜா உடன் தாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் 1990 ஆம் ஆண்டு வரை இளையராஜாவுக்கு ராயல்டி வழங்கி வந்ததாகவும் அதன்பின் நிறுத்திவிட்டதாகவும் வாதங்களை வைத்தார்.

இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ இசையமைப்பாளருக்கு தார்மீக உரிமை வரும். சமீபத்தில் தன்னுடைய பாடல் திரிக்கப்பட்டதாக 'மஞ்சள் மல்' பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என எக்கோ நிறுவன வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அப்பொழுது இளையராஜாவை கௌரவப்படுத்தியதாக 'மஞ்சள் மல்' இயக்குநரும் தயாரிப்பாளரும் கூறியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிப்புரிமை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளருக்கு தன்னுடைய உரிமை வழங்கி விட்டார். உரிமை வைத்திருக்க விரும்பினால் ஒப்பந்தம் செய்ய வேண்டும். எந்த ஒப்பந்தமும் செய்யாத நிலையில் இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ தரப்பு வாதங்களை வைத்தது. எக்கோ நிறுவன தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இளையராஜாவின் தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story

உலகம் முழுவதும் வெளியாகும் ‘குணா’; ரீ - ரிலிஸ் தேதி அறிவிப்பு

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Kamal Haasan  Guna movie worldwide re-release date announced

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. 

மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை மஞ்சு மெல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதைப் பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணாபடத்தை இயக்கிய சந்தானபாரதி. 

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன்,  ரோஷினி, ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். 

1991 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கியசிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசை குணா வென்றது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.