நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தத் தேர்தலில் முக்கிய திருப்பமாகத் தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இருக்கிறது. ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். இதனிடையே, கேரளாவில் இதுவரை கால் பதிக்காத பா.ஜ.க, இந்த தேர்தலில் முதல் முறையாக ஒரு தொகுதியைப் பிடித்துள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரையும், காங்கிரஸ் வேட்பாளரையும் தோற்கடித்து, 4,12,339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுரேஷ் கோபியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “வடகரா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். இடதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால் இவ்வளவு ஏமாற்றத்தை உணர்ந்திருக்க மாட்டோம்.
சுரேஷ் கோபியை ஆதரித்து பிரதமர் மோடி மூன்று முறை திருச்சூருக்கு வந்து பிரச்சாரம் செய்தார். சுனில்குமாருக்கு ஆதரவாக பினராயி விஜயன் பிச்சாரம் செய்தார். ஆனால், டி.கே.சிவகுமாரை தவிர எந்தத் தேசியத் தலைவர்களும் எனக்காக பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஆனால் வேறு சிலர் வந்திருக்கலாம். தேர்தலில் போட்டியிடும் மனநிலையை இழந்துவிட்டதால், இனி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். சில காலம் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி இருப்பதே எனது முடிவு” என்று கூறினார்.