நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், "பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களில் ஒவ்வொருவரும் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லூரிகளுக்குள் வர அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பறைகளில் இருக்கைகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கூடாது; அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கவைக்கப்பட வேண்டும். மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வந்தாலும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்" இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.