Skip to main content

‘அனைவருக்கும் சமத்துவம், வலியுறுத்திய பெரியார்’ - முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்!

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
CM Pinarayi Vijayan says Periyar emphasized equality and freedom for all 

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (12.12.2024) காலை முதல் வைக்கம் நகரில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 10 மணியளவில் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்றுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். அதோடு வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாகத்  தந்தை பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு இந்த விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசுகையில், “முற்போக்கு சிந்தனைக்கு எதிராக அந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் பெரியார். தமிழ்நாட்டில் 1952ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு பின்னால் பெரியார் இருந்தார்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குப் பெரியாருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. சமூகநீதியைக்  காக்கவும், சாதி பாகுபாட்டை எதிர்க்கவும் ‘குடியரசு’ பத்திரிகையை பெரியார் நடத்தினார். சமூக நீதி காவலராக பெரியார் திகழ்ந்தார். மதம் மற்றும் கடவுளின் பெயரில், கல்வி தடுக்கப்பட்டதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். சமத்துவத்தை வலியுறுத்திய பெரியார் அதன் வழியிலே செயல்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. வர்ணாசிரம கோட்பாடுகளைத் தனது கொள்கைகள் மூலம் முறியடித்தவர் பெரியார் ஆவார். சோவியத் ரஷ்யா சென்ற பெரியார் அங்கு மூன்று மாதம் தங்கியிருந்தார். அப்போது சோசலிஸ ஆட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் உயர்வு தாழ்வில்லை என்பதை நேரில் பார்த்தவர் பெரியார்.

சமூக நீதி என்ற மையப் பொருளைக் கொண்டு அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தியவர் பெரியார் ஆவார். பெரியார், வைக்கம் கோவில் நடைபாதையில் ஒடுக்கப்பட்டோர் நடக்கும் உரிமை பெற்றுத் தர நடந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பெரியாரைத் திருவாங்கூர் சமஸ்தான அரசு கைது செய்ய சிறையில் அடைத்தது. இருப்பினும் தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் போராட்டத்திற்காக அழைத்து வந்தார். மகாராஷ்டிராவில் ஜோதி பாய் பூலே சாவித்திரி பாய் பூலே போல் தமிழ்நாட்டில் பெரியார் நாகம்மை தந்தை தம்பதி போராடியது. வைக்கப் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்