கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆழ்துளைக் கிணற்றின் மேல்பகுதி மூடாமல் இருந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சதீஸ் - பூஜா தம்பதியினரின் சுமார் ஒன்றரை வயது குழந்தை இந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில் அவரை உயிருடன் மீட்க பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குழந்தையை மீட்கும் பணி சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அதே சமயம் மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ், வாகனமும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே உள்ளே சிக்கிய குழந்தை உயிருடனே இருப்பதாக மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே செலுத்தப்பட்ட கேமராவில் குழந்தையின் அழுகுரல் பதிவான வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சாத்விக் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுமார் 18 அடி ஆழத்தில் தலைகீழாக குழந்தை சிக்கியிருந்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் குழி தோண்டி, கீழிருந்து மேலே சென்று குழந்தையை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் தாத்தா சக்கரப்பா புதிதாக ஆழ்துளைக் கிணற்றை அமைத்துவிட்டு, பின்னர் அதனை மூடாமல் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.