அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால், ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் இறுதியில் எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சட்டீஸ்கர் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல், ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பூபேஷ் பாகலிடம், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இதனால், ராகுல் காந்தியின் செல்வாக்கு நாடு முழுவதும் பரவியது. இதில் திகைத்துப் போன பா.ஜ.க அரசு, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு முயற்சி எடுத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்ததால், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீட்கப்பட்டது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை அகற்றவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் உள்ள 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய நோக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பாக ராகுல் காந்தி போட்டியிட வேண்டும். இதில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.” என்று பேசினார்.