தெலங்கானா பெண் மருத்துவர் வழக்கில் எனக்கவுண்டரில் உயிரிழந்த சென்னகேசவலு என்ற நபரின் மனைவிக்கு 13 வயதுதான் ஆகிறது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதாக அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இதில் கொல்லப்பட்ட சிவா மற்றும் நவீன் ஆகிய இருவரும் 18 வயது நிரம்பாதவர்கள் என அவர்கள் இருவரின் பெற்றோரும் தெரிவித்து வரும் நிலையில், உயிரிழந்த சென்னகேசவலுவின் மனைவிக்கு 13 வயது தான் ஆகிறது என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 28 வயதான சென்னகேசவலுவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு பிறந்த இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னகேசவலு மனைவியின் பள்ளியில் அவர் குறித்து அதிகாரிகள் விசாரித்த போதே, இந்த உண்மை தெரிய வந்துள்ளது. பெற்றோரை இழந்த அந்தப் பெண், தற்போது சென்னகேசவலுவின் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் காப்பகத்தினர், ஒருவாரத்துக்குள் அந்தப் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னகேசவலுவின் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.