பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி பூசல் பெரிதானதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுத்தது.
அதனைத்தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாபின் புதிய முதல்வராக இன்று (20.09.2021) பதவியேற்றார். அவருக்குப் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், சுக்ஜிந்தர் ரந்தாவா மற்றும் பிரம் மொஹிந்திரா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் கலந்துகொண்டனர். அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இந்த பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளார்.
சரண்ஜித் சிங் சன்னி தேர்தல் வரை முதல்வராக இருப்பார் எனவும், அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படமாட்டார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.